search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை மழை"

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நெல்லை மாநகரில் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளம் தொடர் மழையால் நிரம்பி காணப்படுகிறது.

    மேலும் பாபநாசம் அணை, சேர்வலாறு அணை பகுதிகளில் நேற்று பகலில் பரவலாக மழை பெய்தது. இதனால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் உபரி தண்ணீரும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

    தென்காசியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் பலத்த மழை விட்டுவிட்டு பெய்தது. குற்றாலத்திலும் மழை பெய்ததால், அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் செம்மண் நிறத்தில் தண்ணீர் சென்றது.

    குற்றாலம் பஜாரிலும், பழைய குற்றாலம் செல்லும் படிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    மீன்வளத்துறை ஏற்பாட்டில் சிறிய தெர்மாகோல் படகில், பண்ணை பசுமை காய்கறி கடை பணியாளர்கள் காய்கறி பைகளை எடுத்து சென்றனர். அவர்கள் ரூ.100-க்கான காய்கறிகள் தொகுப்பை விற்பனை செய்தனர். இதே போன்று மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அந்த படகை பயன்படுத்தி வெளியிலும் வந்து சென்றனர்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதையொட்டி மாணவ-மாணவிகளின் நலன் கருதி இன்று ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    கனமழையால் உடைப்பு ஏற்பட்ட பாலத்தில் அமர்ந்து ரெட்டியார்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் சாலைகளும் பாதிக்கப்பட்டு காணப்படுகிறது.

    பாளை என்.ஜி.ஓ. காலனி குளக்கரையில் இருந்து ரெட்டியார்பட்டி ஆவின் பால்பண்ணை செல்லும் வழியில் ஒரு பாலம் உள்ளது. நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அங்குள்ள குளம் நிரம்பி பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் அந்தபாலத்தில் உடைப்பு ஏற்பட்டு 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை திடீரென அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் உடைப்பு ஏற்பட்ட பாலத்தில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக பாலம் சீரமைக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதே போல் கனமழைக்கு தெற்கு புறவழிச்சாலை சிக்னல் அருகே உள்ள மின்மாற்றி முழுவதும் நேற்றிரவு தண்ணீரில் மூழ்கியது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    உடனடியாக நெல்லை மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் முத்துக்குட்டி ஆகியோர் விரைந்து சென்று வேறுபகுதிகளில் இருந்து இணைப்பு வழங்கி மின்சாரம் வழங்கினர்.

    இன்று காலை அந்த மின்மாற்றி சரி செய்யும் பணி நடந்து வருகிறது. 


    நெல்லை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. #Rain

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையினால் பெரும்பாலான அணைகள், குளங்கள் நிரம்பியிருந்தன. இந்த அணைகள், குளங்களில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று மாவட்டத்தில் பல பகுதியில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. குறிப்பாக மணி முத்தாறு, நெல்லை, சேரன்மகாதேவி பகுதியில் கன மழை பெய்தது.

    இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குற்றாலம், பாபநாசம் மலைப் பகுதியில் பெய்த மழையினால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி ஆகிய அருவிகளில் அதிகளவு தண்ணீர் கொட்டியது.

    தற்போது அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஐயப்ப சீசன் என்பதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க ஐயப்ப பக்தர்களும் அதிகளவில் வந்தனர். இதனால் கூட்டத்தை ஒழுங்கு படுத்த அருவிகளில் போலீசார் நிறுத்தப்பட்டனர். தொடர் மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளன. இதனால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 120.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 122.87 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104.30 அடியாகவும் உள்ளன. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1410 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 922 கன அடி தண்ணீர் வருகிறது.

    பாபநாசம் அணையில் இருந்து 20 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 480 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகின்றன. பாபநாசம் கீழ் அணையில் இருந்து 856 கன அடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல் கடனா அணை நீர்மட்டம் 79.40 அடியாகவும், ராமநதி அணை 65.75 அடியாகவும், கருப்பாநதி அணை 59.01 அடியாகவும், குண்டாறு அணை 32.25 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை 29 அடியாகவும், நம்பியாறு அணை 12.74 அடியாகவும், கொடுமுடியாறு அணை 20.50 அடியாகவும், அடவிநயினார் அணை 73 அடி யாகவும் உள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 99.10 அடியாக உயர்ந்தது. #NellaiRain #ManimutharDam
    நெல்லை:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் லேசாக வெயில் அடித்த நிலையில் மாலையில் கரு மேகங்கள் சூழ்ந்தன.

    பின்னர் சில பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை, செங்கோட்டை, கருப்பாநதி அணைப்பகுதியில் மிதமான மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள‌து.

    இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 119.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1004 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 516 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 128.38 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 130.97 அடியாக உயர்ந்துள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 98.75 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 99.10 அடியாக உயர்ந்தது. மாலையில் இந்த அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 424 கன அடி தண்ணீர் வருகிறது. கடனா அணை நீர்மட்டம் நேற்று 73.80 அடியாக இருந்தது. இன்று இது 74.20 அடியாக அதிகரித்துள்ளது.

    ராமநதி அணை நீர்மட்டம் 66.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் உள்ளன. அடவிநயினார் அணை நீர்மட்டம் 97.50 அடியாக இருக்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 28.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:‍-

    கருப்பாநதி-21, செங்கோட்டை-19, குண்டாறு-11, நம்பியாறு-8, பாபநாசம்-7, சேர்வலாறு-6, களக்காடு-5.4, ராமநதி-5, தென்காசி-4.3, கடனா நதி-2, அடவிநயினார் அணை-2.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. சாத்தான்குளத்தில் 4 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2.5 மில்லிமீட்டரும், தூத்துக்குடியில் 2.4 மில்லிமீட்டரும், கடம்பூர், வைப்பரில் தலா 2 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. #NellaiRain #ManimutharDam
    நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. #Rain

    நெல்லை:

    நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பகலில் வானம் மேகமூட்டத்துடனும் மாலையில் மழையும் பெய்து வருகிறது. இரவு விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக ராதாபுரம் கடலோரப்பகுதியில் 5.2 மில்லிமீட்டரும், நம்பியாறு அணைப்பகுதியில் 5 மில்லிமீட்டரும், பாபநாசம் அணைப்பகுதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 797 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 395 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 119.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 132.45 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைப் பகுதியில் 1 மில்லிமீட்டர் அளவுக்கு மட்டுமே மழை பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 256 கனஅடி தண்ணீர் வருகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை 96.75 அடியாக உள்ளது. இதுபோல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரப்பகுதியில் பரவலாக கனமழையும், சாரல்மழையும் மாறிமாறி பெய்து வருகிறது. அதிகபட்சமாக சூரங்குடி பகுதியில் 27 மில்லிமீட்டரும், வைப்பாறு பகுதியில் 22 மில்லிமீட்டரும் பெய்துள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், குலசேகரப்பட்டினம் பகுதியிலும் ஒரளவு நன்றாக மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    ராதாபுரம்-5.2, நம்பியாறு-5.00, பாபநாசம்-4, பாளை-2, சேர்வலாறு-2, நாங்குநேரி-2, அம்பை-1, மணிமுத்தாறு-1

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலைவரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    சூரங்குடி-27, வைப் ‘பார்-22, ஸ்ரீவைகுண்டம்-16.5, ஓட்டப்பிடாரம்-14, திருச்செந்தூர்-14, குலசேகரபட்டினம்-12, விளாத்திகுளம்-12, தூத்துக்குடி-7.2, வேடநத்தம்-7, கடம்பூர்-6, சாத்தான்குளம் -6, கீழஅரசடி-5.6, காயல்பட்டினம்-3, கயத்தாறு-1, கோவில்பட்டி-1. #Rain

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.#Rain

    நெல்லை:

    தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் மழை கொட்டியது. செங்கோட்டை, குற்றாலம், அம்பை, பாளை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 49 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 33 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. இந்த மழையினால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் ஓடியது. ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு மழை காரணமாக மின் தடை ஏற்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

    பாபநாசம், குற்றாலம், களக்காடு மலைப்பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 104.65 அடியாக இருந்தது. இன்று இது 105.30 அடியாக அதிகரித்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.


     

    118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.40 அடியாக உள்ளது. இதேபோல 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 63அடியாகவும், 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 53.50அடியாகவும், 72.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 59.39 அடியாகவும் உள்ளன.

    36.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையினால் நிரம்பியது. பின்னர் பாசனத்துக்கு அணையில் இருந்து தண்னீர் திறந்து விடபப்ட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் இந்த அணை மீண்டும் நிரம்பியது. இதேபோல 23.60 உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணை ஏற்கனவே தென்மேற்கு பருவம்ழையினால் நிரம்பியது. இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 21.31 அடியாக இருந்தது. இன்று இந்த அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

    50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை 20 அடியாகவும், 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 30 அடியாகவும், 132.22 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 83 அடியாகவும் உள்ளன.

    குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையினால் நேற்று முன்தினம் மாலையில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்ருலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபப்ட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை வெள்ளம் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கபப்ட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் மழை கொட்டியதால் அருவிகளில் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டது. இன்று காலையும் அருவிகளில் அதிகளவு தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தான்டி மழை தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தொடர் மழை காரணமாக நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் பயிர்கள் முளைவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழையினால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. அவற்றை வெளியேற்றும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. #Rain

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டில் 74 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. #NellaiRain
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்டு மாதம் இறுதிவரை மழை பெய்தது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் பிரதான பாசன அணையான பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடு முடியாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் நிரம்பின. மொத்தமுள்ள 11 அணைகளிலும் நீர் இருப்பு மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 771 மில்லியன் கன அடியாகும்.

    தாமிரபரணி பாசனத்தில் சராசரியாக ஆண்டுக்கு 1084 மில்லிமீட்டர் மழை பெய்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்தன. ஆண்டுக்கு சராசரியாக 814.80 மில்லிமீட்டர் மழையே பெய்தது. இதன்காரணமாக அணைகள் முழு அளவில் நிரம்பவில்லை. பாசனத்துக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மாவட்டத்தில் 278 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 165 சதவீதம் அதிகமாகும். பாபநாசம் உள்ளிட்ட அணைப்பகுதிகளிலும், அம்பை, தென்காசி பகுதிகளிலும் அதிகபட்ச மழை பெய்தது. பாபநாசம் அணையில் மொத்தம் 441 மில்லிமீட்டரும், செங்கோட்டை குண்டாறு பகுதியில் 563 மில்லிமீட்டர் மழையும் பதிவானது.

    பொதுவாக ஆகஸ்டு மாதம் மட்டுமே சராசரியாக 23.30 மில்லிமீட்டர் மழை பெய்யவேண்டும். ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 137.76 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இது அதிகபட்சம் ஆகும். 2006, 2008, 2011, 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் சராசரியான மழையை விட கூடுதல் மழை பெய்தது. இந்த ஆண்டு 518.56 மில்லிமீட்டர் பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 74 சதவீதம் அதிகமாகும்.

    இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அணைகளில் மொத்தம் 9055.23 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 60 சதவீதம் கூடுதலாகும்.

    இது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பிசான சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.

    இதனிடையே பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், இந்த அணைகளில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 20-ந்தேதி பாபநாசம் அணை நீர்மட்டம் 141.80 அடியாக இருந்தது. தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் 10 நாட்களில் இந்த அணை நீர்மட்டம் 10 அடி குறைந்து, நேற்று 130.20 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 128.95 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 20-ந் தேதி 146.09 அடியாக இருந்தது. 10 நாட்களில் இந்த அணை நீர்மட்டம் 25 அடி குறைந்து நேற்று 120.47 அடியாக இருந்தது. இன்று இது 119.88 அடியாக உள்ளது.

    பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 1,405 கனஅடி நீரும், சேர்வலாறு அணையில் இருந்து விநாடிக்கு 2003 கனஅடி நீரும் நேற்று வெளியேற்றப்படுகிற‌து.

    இதேபோல் மற்ற அணைகளிலும் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. எனவே விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அணைகளில் நீர் இருப்பு வைத்து பிசான சாகுபடிக்கு உரியநேரத்தில் தண்ணீர் திறக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. #NellaiRain
    ×